க.பாலாசி: தனிமை

Saturday, February 14, 2009

தனிமை

Single Woman

தனிமையிலே இனிமை காண முடியுமா என அந்தக் காலத்தில் பாட்டு எழுதி வைத்தார்கள். திருமண உறவுதான் ஒரு ஆண் அல்லது பெண்ணின் முழுமை என்பதும் பலமாக நம்பப்பட்டு வந்தது.

ஆனால் இன்றைய நிலைமை என்ன ..? திருமண பந்தத்தை உதறவிட்டு அல்லது மறுத்து விட்டு தனிமை வாழ்க்கையை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

ஆணோ, பெண்ணோ திருமணம் செய்வதற்கு இப்போது அவசரப்படுவதில்லை. காரணம், பற்பல இருக்கலாம்.

சரி, தனிமையில் இனிமையாக இருக்க முடியுமா..? முடியும் என்கிறது ஒரு ஆய்வு. அதற்கு சில காரணங்களையும் அது அடுக்குகிறது.

நமது உடலிலிருந்து அந்தக் காரணங்களை தொடங்குகிறது அந்த ஆய்வு..

திருமணமாகாதவர்களுக்கு உடல் எடை கட்டுக்குள் இருக்குமாம். கார்ன்வெல் பல்கலைக்கழகம் இதுதொடர்பாக நடத்தி சமீபத்திய ஆய்வில், திருமணம் ஆகாத பெண்களுக்கு பொதுவாக எடை அதிகரிப்பதில்லை. ஆனால் திருமணமான பெண்களுக்கு முதல் சில ஆண்டுகளில் ஐந்து முதல் எட்டு பவுன்டு வரை எடை கூடி விடுகிறதாம். முதல் பத்து ஆண்டுகளில் திருமணமான பெண்களின் எடை சராசரியாக 54 பவுன்டுகள் கூடி விடுகிறதாம்.

திருமணமாகாத பெண்களுக்கு தங்களது உடல் அழகு, எடை உள்ளிட்டவற்றில் கூடுதல் அக்கறையும், கவனமும் இருக்கிறதாம். அதேபோல அவர்களின் மனமும் புத்துணர்ச்சியுடன் இருப்பதால் மிகவும் இளமையாக உணர்கிறார்களாம் - வயதானாலும் கூட.

மற்ற பெண்களை விட தாங்கள் எப்போதும் அழகாக காட்சி தர வேண்டும். மற்றவர்களை கவரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் திருமணமாகாத பெண்களுக்கு நிறையவே இருக்கிறதாம். ஆனால் கல்யாணமான பெண்களுக்கு இருக்கும் கவலையே வேறு.

கணவருக்குப் பிடித்த மாதிரியாக தோன்ற வேண்டும். கணவரைக் கவரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற 'குறுகிய' வட்டத்துக்குள் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்களாம். குடும்பக் கவலை உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்ட்ரா விஷயங்களும் சேர்ந்து திருமணமான பெண்களின் மனப்பளுவை அதிகரித்து விடுகிறதாம். இதனால் அவர்களது எடை உயர வாய்ப்பு ஏற்படுகிறதாம்.

2வது காரணமாக கூறப்படுவது சாதனை மனப்பான்மை. எதையாவது சாதிக்க வேண்டும். மற்றவர்களை விட நாம் ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்ற எண்ணம் திருமணமான பெண்களை விட ஆகாத பெண்களுக்கே அதிகம் இருக்கிறதாம். இது ஆண்களுக்கும் கூட பொருந்துமாம்.

திருமணமாகாதவர்களுக்கு குடும்பப் பொறுப்புகள் இருப்பதில்லை. சுதந்திரமாக இருக்கிறார்கள். கட்டுப்பாடு கிடையாது. எனவே சாதிக்கும் ஆர்வம் இவர்களிடம்தான் அதிகம் இருக்கிறதாம்.

இதுகுறித்து லண்டன் பொருளாதாரவியல் மற்றும் அரசியல் விஞ்ஞானப் பள்ளி நடத்திய ஒரு ஆய்வில், கல்யாணமாகாத ஆண் விஞ்ஞானிகள், திருமணமான ஆண் விஞ்ஞானிகளை விட சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது.

திருமணமாகாத விஞ்ஞானிகளின் சிந்தனைத் திறன், கல்யாணமானவர்களை விட அதிகம் இருக்கிறதாம். ஷார்ப் ஆகவும் இருக்கிறதாம்.

கல்யாணமாகாத ஆண்கள் பெரும்பாலும், தங்களது திறமையைப் பயன்படுத்தி பெண்களைக் கவர முயலுகிறார்கள். பெண்களைக் கவர்ந்து அவர்களை காதலித்து மணந்து கொண்ட பின்னர் அவர்களது கிரியேட்டிவிட்டி படிப்படியாக குறைந்து விடுகிறதாம். வழக்கமான சராசரி ஆண்களாகி விடுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

மேலும், கல்யாணமாகி, தந்தையும் ஆன பின்னர் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் அளவு குறைந்து விடுகிறதாம். இதுதான் சுறுசுறுப்பான செயல்பாடுகளுக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

3வது காரணம், வீட்டு வேலைகளில் அசமஞ்சமாக இருக்கலாம். திருமணத்தைத் தவிர்த்து தனிமையில் இருப்பவர்களுக்கு வீட்டு வேலைகளில் படு சுதந்திரம் கிடைக்கிறது.

நமக்கு தோன்றினால் மட்டுமே வீட்டைக் கூட்டலாம், பாத்திரங்களைத் துலக்கலாம். துணிகளைத் துவைக்கலாம். நினைத்த நேரத்தி்ற்கு எந்த வேலையையும் செய்யலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது.

தனிமையில் இருக்கும் பெண்களுக்கு இந்த விஷயத்தில் நிறைய சுதந்திரம் கிடைக்கிறது. திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்த ஒரு பத்திரிக்கை ஆய்வில், திருமணமான பெண்களை விட திருமணமாகாத பெண்கள்தான் குறைந்த அளவில் வீட்டு வேலை செய்கிறார்களாம்.

ஆனால் ஆண்கள் அப்படியே தலைகீழ். திருமணத்திற்கு முன்புதான் அவர்கள் நிறைய வீட்டு வேலை செய்கிறார்களாம். ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் அப்படியே தலைகீழாக மாறி விடுகிறார்களாம்.

இன்னொரு முக்கியமான சமாச்சாரத்தை இங்கு சொல்லியாக வேண்டும். அது செக்ஸ். இந்த விஷயம் நம்ம ஊருக்கு எந்த அளவுக்குப் பொருந்தும் என்று தெரியவில்லை. ஆனால் வெளிநாடுகளுக்கு இந்த விஷயம் சர்வ சாதாரணம்.

அதாவது, கல்யாணமான ஆண், பெண்களை விட சிங்கிள்ஸ் ஆக இருக்கும் ஆண்களும், பெண்களும்தான் செக்ஸில் அதிக நாட்டம் உடையவர்களாக, அதை அதிகம் அனுபவிப்பவர்களாக உள்ளனராம்.

திருமணமானவர்கள் ஆண்டுக்கு சராசரியாக 98 முறை செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதாக ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறுகிறது (இது கூடவும் இருக்கலாம்). அதேசமயம், தனிமையில் இருப்பவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 49 முறை செக்ஸ் உறவை மேற்கொள்கிறார்களாம் (இதுவும் கூடக் குறைய இருக்கலாம்).

திருமணமானவர்களுக்கு செக்ஸ் என்பது சாதாரணமான விஷயம். கணவனும், மனைவியும் என்றான பின்னர் பரீட்சார்த்தமோ, வித்தியாசமோ அவர்களிடம் இருக்க முடியாது. ஆனால் தனிமையில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு உறவும் வித்தியாசமானதாக, புதுமையானதாக இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இதுகுறித்து பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற இதழில் கூறுகையில், திருமணமாகாத ஆண், பெண்களுக்கு செக்ஸ் உறவு ஒவ்வொரு முறையும் புதிதாக தோன்றுகிறது. அதை அவர்கள் அனுபவிக்கத் தவறுவதில்லை. இதனால் ஒவ்வொரு உறவும் அவர்களுக்கு முக்கியமானதாக மாறி விடுகிறது என்கிறது அந்த செய்தி.

இத்தாலியின் பிசா நகர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், திருமணமான முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே ஆண் மற்றும் பெண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரான் அளவு அபரிமிதமாக இருக்கிறது. இதனால் அந்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் செக்ஸில் பூரணமாக ஈடுபடுகிறார்கள்.

ஆனால் அதன் பின்னர் டெஸ்டோஸ்டிரான் அளவு குறைந்து, ஆக்ஸிடாசின் போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகரித்து விடுகிறது. இதனால் வேகம் குறைந்து போய் விடுகிறது.

எனவே செக்ஸ் உறவுக்கும், திருமணத்திற்கும் ஏழாம் பொருத்தம் என்று கூடச் சொல்லலாம்.

இதுதவிர மன அழுத்தம் என்ற விவகாரமே சிங்கிள்ஸ் மனிதர்களுக்கு இருப்பதில்லையாம். திருமணமானவர்களுக்கு பல கவலைகள். ஆனால் திருமணமாகாதவர்களுக்கு ஒரே கவலைதான் - அது பொழுதை எப்படியெல்லாம் போக்குவது என்பது. மன அழுத்தம் இவர்களுக்கு மிக மிக குறைவு என்பதால் உடல் ஆரோக்கியமும் தானாகவே சிறப்பாக இருக்கிறதாம்.ட

இப்படி தனிமையில் இருப்பவர்களுக்குத்தான், திருமணமானவர்களை விட நிறைய சந்தோஷமும், நிம்மதியும், சுதந்திரமும் இருக்கிறது என்கின்றன மேற்கண்ட ஆய்வுகள்.

அதற்காக ஒற்றை மரமாகவே இருந்தால்தான் உருப்படுவோம் என்று நாம் கூற வரவில்லை. இனிமைக்கு தனிமை மட்டுமே முக்கியம் என்றில்லை. இனிய காதலும், அருமையான இல்லறமும் கூட இனிப்பான விஷயங்கள்தான், இல்லையா?

நன்றி ,
தட்ஸ் தமிழ்.

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் பாலாசி

ஆய்வுகளின் முடிவுகள் அவ்வப்பொழுது வேறுபடும் - தனிமையில் இனிமை காண முடியும் - இல்லறத்திலும் இனிமை படைக்க முடியும் - கவலை வேண்டாம் - இல்லற வாசியா - இல்லைஎனில் உடனே மணமுடி

நல்வாழ்த்துகள் பாலாசி

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO